அவருக்கு எல்லாமே தெரியும்!

ரஜினி அரசியல்
அவருக்கு எல்லாமே தெரியும்!
Published on

காலையில் தலைவர் அரசியலுக்கு வருகிறார் என்று அறிவித்த அரைமணி நேரத்தில் எங்கள் மன்றத்தினர் தன்னெழுச்சியாக  தூத்துக்குடி சிவன்கோவில் பக்கம் ஒன்றுகூடி பட்டாசு போட்டு பொதுமக்களுக்கு இனிப்பு கொடுக்க ஆரம்பித்தோம்.

டூவிலரில் மன்றக் கொடியுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று கிட்டத் தட்ட முப்பது இடங்களில் வெடி போட்டோம். எல்லா ரசிகர்களும் உணர்ச்சிப்பூர்வமாகக் கலந்துகொண்டார்கள்'' என்கிறார் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மன்ற செயலாளர் டக்ளஸ்.

 ‘‘எங்க ரசிகர்கள் மக்கள் மன்றத்திற்காக ஆள் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைப் பொதுமக்களிடம் கொடுத்து உறுப்பினர்கள் சேர்த்துக்கொண்டு இருக்கிறோம். பொதுமக்களும் ஆர்வமாக விண்ணப்பம் வாங்கி பூர்த்திசெய்து கொடுக்காங்க. கிராமங்களிலும் எங்க ஆளுங்க பொதுமக்களுக்கு விண்ணப்பம் கொடுத்து உறுப்பினர் சேர்ந்துக்கிட்டு இருக்காங்க. முதல்கட்டவேலையா ரொம்ப உணர்ச்சியுடன் செய்துக்கிட்டு இருக்கோம். எங்க மாவட்டத்தைப் பொறுத்தவரை தனித்து நின்றால் 100 சதவீதம் வெற்றி மாதிரிதான் தெரிகிறது. நாங்க அந்தளவுக்கு ஒவ்வொரு வார்டு வார்டாகவும் கிராமம் கிராமமாகவும் பொறுப்புமிக்க ஆட்களை நியமித்து மக்கள் மத்தியில் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கோம். ஒரு தொகுதியில் ஓட்டு எண்ணிக்கைப்படி 60 சதவீத மக்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்குப் பாடுபடுகிறோம். இதில் வயதானவர்கள், பெண்கள்தான் அதிகளவில் எங்களின் விண்ணப்பத்தை வாங்கி செல்கிறார்கள். 

மேலும் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதியிருக்கு. அதில் தொகுதிவாரியாக ஆட்களைப்போட்டு வேலை செய்கிறோம். சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறோம். போறப்போக்கப் பார்த்தா உள்ளாட்சி தேர்தலிலே எங்க ஆட்கள் நின்னா, நாங்க வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு வருது.

 மேலிடத்தில் நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அடுத்த வேலைக்கான உத்தரவுக்காக காத்திருக்கிறோம். தொடர்ந்து உற்சாக மாக வேலைசெய்யத் தயாராக இருக்கிறோம்'' என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் டக்ளஸ்.

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ‘‘ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்ப்பதற்காக ஆரம்பத்தில் நாங்கள் ஒவ்வொரு தெருவிலும் முகாம் போட்டு உறுப்பினர் சேர்க்கை நடத்தினோம். அதில் பொதுமக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்ட வில்லை. உடனே நாங்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பப்படிவத்தைக் பொதுமக்களிடம் கொடுக்க ஆரம்பித்தோம். மக்கள் நல்ல மரியாதைக் கொடுக்கிறார்கள். நெல்லையைப் பொறுத்தவரை மாநகரம், மாவட்டம் என்று இரண்டு விதமாக உறுப்பினர் சேர்க்கை வேலைகள் நடக்கின்றன. முதற்கட்டமாக இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை உறுப்பினராகச் சேர்த்திருக்கிறோம்'' என்று நிர்வாகிகள் மத்தியில் கூறுகிறார்கள்.

 ‘‘நான் 33 வருடமாக ரஜினி ரசிகராக இருக்கிறேன். எங்க தலைவர் அரசியலுக்கு வந்ததது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நம்ம நாட்ட இனிமேல் அவரால் மட்டும்தான் வழி நடத்தமுடியும். அவர் சினிமாவுக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் ஒரு கதாநாயகன் சிகப்பா அழகாக இருக்கணும், ஒழுங்காக நடிக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. ஆனா எங்க தலைவர் வந்துதான் அந்த இலக்கணத்தையே உடைத்தார். நிறைய கதாநாயகர்கள் யோக்கியமாகவே நடித்து பெயர் வாங்கியவர்கள். ஆனால் ரஜினி அப்படிஅல்ல போக்கிரியாக நடித்தும் மக்கள் மத்தியில் பெயர் வாங்கியிருக்கிறார். ‘சினிமாவில் போக்கிரியாக ரஜினி மட்டுமே நடிப்பதை மக்கள் ஏற்றுகொள்ளுவார்கள். வேறு நடிகர்களை ஏற்றுகொள்ளமாட்டார்கள்' என்று சிவகுமார் ஒருமுறை பேட்டியில் கூறியிருக்கிறார். ரஜினி முதலில் வில்லனாக நடித்து கதாநாயகனாக வரும்போது மற்ற கதாநாயக நடிகர்கள் வில்லனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுதான் ரஜினியின் சிறப்பாக நாங்க பார்க்கிறோம்.

 ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு முன்னால் அவருடைய பிறந்தநாளுக்கு நம் நாட்டின் மிக முக்கியமான ஆளுமைகளான சச்சின், அம்பானி, மம்தா, டோனி போன்றவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக் கள் சொல்லுவதை வைத்து அவருக்கான பலத்தை புரிந்துகொள்ளலாம்,'' என்று நெல்லை நகர ரஜினி மன்ற துணைத்தலைவர் தாயப்பன் சொல்கிறார்.

‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 75000 படிவங்களை வழங்கியிருக்கிறோம். இன்னொரு மடங்கு அதிகமாக உறுப்பினர் சேர்க்கைக்கு முயற்சி எடுக்கச்சொல்லி இருக்கிறார்கள்,'' என்கிற குணா புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி. பேசத் தயங்குகிற அவர் எங்கள் தலைமையகத்தில் கேட்டுப் பேசவா என்கிறார். பின்னர் மெல்ல, 1985&ல் இருந்து ரஜினி மன்றத்தில் இருப்பதாகச் சொல்கிறார். ரஜினியை முழுமையாக நம்புகிறார்.  ‘‘ அவருக்கு எல்லாமே தெரியும். அரசியலில் நேரடியாக இறங்காவிட்டாலும் அதைக் கவனித்து வந்தவர் அவர். அவர் சொன்னதுபோல் காவலர் படையாக நாங்கள் உருவெடுப்போம். மாபெரும் வெற்றியைப் பெறுவோம்,'' என்கிறார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு நாகர்கோவிலில் வடசேரி பஸ்டாண்டில் மட்டும் மாவட்ட ரஜினி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஒரு போஸ்டர் கூட கண்ணில் தட்டுப்படவில்லை. மேலும் நாகர்கோவிலில் மத அடிப்படையில்தான் மக்கள் ஓட்டுபோடுவார்கள். இங்கே ரஜினியா? கமலா என்ற கேள்விக்கே இடமில்லை. இருந்தாலும் மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை மாவட்ட அளவில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திருயிருக்கிறது என்று நாகர்கோவில் ரஜினி ரசிகர் மன்ற வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

தன் பெயரை வெளிவிட விரும்பாத  இன்னொரு மாவட்டத்தலைவர்,‘‘ நான் 38 ஆண்டுகளாக ரஜினி மன்றத்தில் இருந்து கொண்டிருக்கிறேன். எதையுமே எதிர்பார்த்து நாங்கள் இதில் இல்லை. எங்கள் சொந்த சம்பாத்தியத்தை நற்பணிகளுக்காகச் செலவிட்டு வந்தோம். இன்று தலைவர் அறிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே. அவரிடம் எனக்குப் பிடித்தது அவரது ஸ்டைல். அவர் படங்களில் சொன்ன அறிவுரைகள் பிடித்தன. அவர் சொன்ன ஆன்மீகம் பிடித்தது. நான் வேற்றுமதத்தவன். இருந்தாலும் கூட இந்துக்கோயில்களுக்குச் செல்கிறேன். நெற்றியில் பொட்டு வைக்கிறேன். ஆண்டு தவறாமல் திருப்பதிபோய் மொட்டை போட்டுக்கொள்கிறேன். இந்த ஆன்மீகமே அவரால் கிடைத்தது. எங்களுக்குக் கிடைக்கும் மரியாதையே நாங்கள் ரஜினி ரசிகர்கள். அடக்கமாகவும் ஒழுக்கமாகவும் இருப்போம் என்கிற அடையாளத்தால்தான்! இன்று பலர் சொல்லலாம். ரஜினியின் ரசிகர்கள் பலர் வயதாகிவிட்டார்கள் என்று. ஆனால் இப்போது தலைவரின் அறிவிப்புக்குப் பின் எங்கள் அலுவலகம் வந்துபோகிறவர்கள் யார் என்றால் பெரும்பாலும் இளைஞர்கள்தான்,'' என்கிறார்.

பிப்ரவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com